சேலம் அருகே 10ம் வகுப்பு மாணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது நண்பரான தறித் தொழிலாளி, கட்டுப் பகுதியில் மரக் கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இருவரது சடலங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே கே.ஆர்.தோப்பூரை அடுத்துள்ள கோட்டமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கௌசிக் (15), கே.ஆர்.தோப்பூர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்கணச்சாலை, சித்தனூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் சிவராஜ் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தறித்தொழிலாளி சிவராஜிம், சிறுவன் கௌசிக்கும் நண்பர்களாக அடிக்கடி வெளியில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து கௌசிக் வீடு திரும்பியுள்ளார். பிறகு தனது நண்பரான சிவராஜியுடன் பைக்கில் ஏறி வெளியில் சென்றுள்ளார். இரவில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவர்களது பெற்றோர், இரண்டு பேரையும் தேடி வந்தனர். இதனிடையே இன்று காலை மகுடஞ்சாவடி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கணச்சாலை-கே.ஆர்.தோப்பூர் சாலையில் உள்ள மேட்டுக்காடு என்னும் இடத்தில் சேலம் உருக்காலை நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தில் கௌசிக் இறந்து கிடந்தார்.
இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...!
இதனை அவ்வழியே வந்தவர்கள் பார்த்து, மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் பாலாஜி ரமணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று மாணவன் கௌசிக் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது கழுத்தில் கையை அழுத்தி நெரித்ததற்கான தடம் பதிந்திருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் , மாணவனுக்கும் தறி தொழிலாளி சிவராஜ் க்கும் இடையேயான நட்பு குறித்து விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாணவன் கௌசிக்கை பைக்கில் அழைத்துச் சென்ற நண்பர் சிவராஜை போலீசார் தேடினர். அதில் அவர், தாரமங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெரியபட்டி சுடுகாடு அருகில் உள்ள காட்டிற்குள், ஒரு வேப்பமரத்தின் கிளையில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று சிவராஜின் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
மாணவன் கௌசிக்கை வெளியில் அழைத்துச் சென்ற சிவராஜ், அவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியபட்டி சுடுகாடு பகுதிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நண்பர்களாக பழகி வந்த கௌசிக், சிவராஜ் இடையே கடந்த 2 வாரமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மாலை வீட்டிற்கே வந்து, கௌசிக்கை சிவராஜ் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அதனால், அந்த தகராறின் காரணமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவராஜ் சடலமாக மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெரியபட்டி சுடுகாட்டிற்கு அவரது பெற்றோர், உறவினர்கள் வந்தனர். பிறகு அங்கிருந்து சிவராஜ் சடலத்தையும், மேட்டுக்காடு பகுதியில் இருந்து மாணவன் கௌசிக் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக
சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள், மாணவனின் உடலை ஆய்வு செய்து தடயங்களை பதிவு செய்தனர்.
மேலும் மகுடஞ்சாவடி மற்றும் தாரமங்கலம் போலீசார் மாணவன் கொலை மற்றும் தறித்தொழிலாளி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு மதுபோதை காரணமா? மாணவன் கௌசிக்குடன் நண்பராக பழகி வந்த சிவராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
அவ்வப்போது கௌசிக்கை அழைத்துக் கொண்டு சென்று, மது வாங்கி குடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்றிரவும் சிவராஜ் மதுகுடித்தபின், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அதன்பின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பிறகு நண்பரை கொன்று விட்டோமே என்ற வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் டார்ச்சர் கொடுத்த அறிவியல் ஆசிரியர்... மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு... 5 நாட்களுக்குப் பிறகு இப்படியா?