சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.
இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாங்க…தூய்மை பணியாளர்களுடன் நடந்த 7வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆறு கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று நடந்த ஏழாவது கட்டம் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அரசு தரப்புடன் ஏழாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ரவுடிகள் துப்பாக்கியை காட்டி மிரட்டினாலும் போராட்டத்தை பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
போராட்டத்தை சீர்குலைப்பதற்காக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினர். முடிந்தால் கைது செய்து பாருங்கள் என்றும் போராட்டத்தை பின்வாங்க மாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 5வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்... குவிந்து கிடக்கும் குப்பைகளால் மக்கள் அவதி!