சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அவங்க சரியா தானே சொல்லிருக்காங்க.. கோபி சுதாகருக்கு வக்காலத்து வாங்கும் சீமான்..!!

குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
வரும் 10 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடக்க உள்ள மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டு கோரிக்கை உரை ஆற்ற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாத்தியா? இனிமையாச்சு புரிஞ்சுக்கோங்க - சீமான்