மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கையின் கீழ் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் குறைந்தது ஒரு சமஸ்கிருதப் பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கே.வி.எஸ்.) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான முன் தயாரிப்பு பணிகளை ஏற்கனவே அனைத்து பள்ளிகளும் முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் 3-வது மொழியைத் தேர்ந்தெடுப்பது குறித்த கருத்துகளைப் பெறும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், புதிய வழிகாட்டுதல்களை கே.வி.எஸ். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஒரே மொழியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களை ஒரே பிரிவில் இணைக்க வேண்டும். சமஸ்கிருதம் மற்றும் வட்டார மொழிக்கு தனித்தனி பிரிவுகள் உருவாக்கலாம். ஒரு மொழிப் பிரிவுக்கு குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்களின் தேர்வு எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளி முதல்வர்கள் பிரிவுகளை தீர்மானிக்கலாம். ஆனால், எந்தச் சூழலிலும் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது ஒரு சமஸ்கிருதப் பிரிவு இருப்பது கட்டாயம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரேசில் பஞ்சி ஜம்ப் சோகம்: அலட்சியத்தால் பறிபோன பெண்ணின் உயிர்..!!

இதுகுறித்து கே.வி.எஸ். மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாணவர்கள் தங்கள் விருப்பப்படி சமஸ்கிருதம் அல்லது வட்டார மொழியைத் தேர்வு செய்யலாம். இருப்பினும், இடமாற்றம் பெறும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு எந்தப் பள்ளியிலும் சமஸ்கிருதம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் கல்வியை பாதிக்காமல் தொடர்ச்சியாக இருக்க உதவும்” என்றார்.
இந்தப் புதிய விதிமுறை நாடு முழுவதும் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் பொருந்தும். சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. பல பெற்றோர்கள் இந்த மாற்றத்தை வரவேற்றாலும், சிலர் தங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான மொழியைப் படிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கே.வி.எஸ். நிர்வாகம் இந்த விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் பிரிவு ஒதுக்கீடு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போப் ஆண்டவர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு! ரோம் பயணம் ரத்து! ஸ்பெயின் மன்னர் அசத்தல் ப்ளான்!