2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு காலத்தில், சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்திவந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் திறந்திருந்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜூன் 19ஆம் தேதி இரவு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவரும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சாட்சியங்களின்படி, இரவு முழுவதும் லத்திகளால் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு கடுமையான உள் மற்றும் வெளிப்புற காயங்கள் ஏற்பட்டன.அடுத்த நாள், அவர்கள் கோவில்பட்டி சிறைக்கு மாற்றப்பட்டனர். ஜூன் 22ஆம் தேதி ஜெயராஜும், 23ஆம் தேதி பென்னிக்ஸும் மருத்துவமனையில் இறந்தனர். இறப்புக்கான காரணமாக காவல் துன்புறுத்தலே என்று குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர்.
இந்தச் சம்பவம் வெளியானதும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கடைக்காரர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளை இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் சிபி-சிஐடி விசாரணை நடத்தியது. பின்னர், தமிழ்நாடு அரசு வழக்கை சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: சிறை தண்டனை நிறுத்தம்: "விவசாயிகளுக்காக உயிரையும் விடுவேன்" விடுதலையான பி.ஆர்.பாண்டியன் பேட்டி!
அவர்கள் மீது கொலை, சதி, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் A1 ஆக இருக்கும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளுக்காக மட்டும் சிறையில் இருந்து செல்ல அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: 4 வருஷம் ஆச்சு?! திமுக எனக்கே ரூ.48,000 கொடுக்கணும்!! லிஸ்ட் போட்ட அண்ணாமலை!