மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்களை அரசு-தனியார் பங்களிப்பு என்ற பெயரில் முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்கத் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ள அதிர்ச்சியளிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்குத் தாரை வார்க்கும் இந்த ஆபத்தான போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவையின் குடிநீர் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டதையும், கடந்த திமுக ஆட்சியில் சேலம் குடிநீர் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க முயன்றபோது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் எழுந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!
தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் அதே தனியார்மயக் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்து, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒட்டுமொத்த பாதாளச் சாக்கடை அமைப்பையே தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத துரோகம் என அவர் சாடியுள்ளார்.

பாதாளச் சாக்கடை என்பது மக்களின் அடிப்படை சுகாதாரம் மற்றும் வாழ்வுரிமை சார்ந்த தலையாய பொதுச் சேவையாகும்; இதனை லாப வெறி கொண்ட தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் பொதுமக்களுக்குப் பேராபத்து ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
பராமரிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில் மிகக் கடுமையான கழிவுநீர்க் கட்டணங்களும் புதிய வரிகளும் சுமத்தப்படும் அவலநிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கழிவுநீர் அடைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான புகார்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கும் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவை எதிர்நோக்கிக் கையேந்தும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை தற்காலிகத் தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு முற்றிலுமாக கேள்விக்குறியாக்கப்பட்டு, அவர்கள் தனியார் முதலாளிகளால் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு ₹2,377.48 கோடியும், நாகர்கோவிலுக்கு ₹189.82 கோடியும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டங்களை, உள்ளாட்சி அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அரசே முழு நிதி ஒதுக்கீடு செய்து பொதுத்துறை மூலமாக மட்டுமே செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட டெண்டர் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகே திரும்பப் பெறப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இப்படி மீண்டும் மீண்டும் பொதுமக்களின் அடிப்படை பொதுச்சேவைகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்பது அரசின் தலையாய மக்கள் நலப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகும் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நல அரசு என்பது பொதுச் சேவைகளை மக்களுக்கு வழங்குவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது என்பதால், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தத் தனியார்மய டெண்டர் நடவடிக்கையை முழுமையாகக் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் பி.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆர்டிஐ விலக்கு அரசாணை வாபஸ்! கடும் எதிர்ப்புக்கு பணிந்தது தமிழ்நாடு அரசு!