தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 18.46 லட்சம் மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாததால், அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்தப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலை ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதன்மையாக, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்து வருவது இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. தமிழக தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கூற்றுப்படி, பூஜ்ஜிய சேர்க்கை உள்ள பள்ளிகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் 5 வயதுக்கு மேற்பட்ட, பள்ளியில் சேர தகுதியான குழந்தைகள் இல்லாத இடங்களில் அமைந்துள்ளன.
மூடப்பட்ட பள்ளிகளின் மாவட்ட வாரியான விவரங்களைப் பார்க்கும்போது, நீலகிரி மாவட்டத்தில் 17 பள்ளிகளும், சிவகங்கையில் 16, திண்டுக்கலில் 12, சென்னையில் 10, ஈரோட்டில் 10, மதுரையில் 10 என்று பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் அருகிலுள்ள பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சொல்லுங்கய்யா... எங்கள இப்படி பாடா படுத்துறாங்க! சீமானிடம் கதறிய தூய்மை பணியாளர்கள்..!

அரசு பள்ளிகள் மூடப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுதான் திராவிட மாடலா என்ற கேள்வி எழுப்பினார். ஒரு நல்ல அரசின் கடமை மாணவச் செல்வங்களுக்குத் தரமான கல்வியைத் தருவதே அன்றி பணத்தைக் கொடுப்பதல்ல என்றும் தரமான கல்வியும், அதற்கேற்ற வேலையும் வழங்கினால் எதிர்காலத்தில் எத்தனை ஆயிரங்களை வேண்டுமானாலும் எம் தலைமுறை பிள்ளைகளால் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
ஆனால், அரசுப்பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, உரிய ஊதியம் வழங்காமல் ஆசிரியர் பெருமக்களை வீதியில் போராட வைத்து ஏழைக் குழந்தைகளின் கல்வியை முடக்கியது, உட்கட்டமைப்பை மேம்படுத்தாததால் இடிந்து விழும் பள்ளி மேற்கூரைகள், அதனைச் சீரமைக்க தனியாரிடம் அரசே கையேந்தி நிற்கும் அவலம், அரசுப்பள்ளிகளில் கஞ்சா, மது உள்ளிட்ட பெருகி வரும் போதைப்பொருள் புழக்கம், அரசுப்பள்ளிச் சிறுமிகளுக்கு அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள், அரசுக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாதது, கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாததுடன், ஊதிய உயர்வு வழங்க மறுப்பது ஆகிய நிர்வாகச் சீர்கேடுகள்தான் அரசுப்பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலும் குறைந்ததற்கான அடிப்படைக் காரணம் என கூறினார்.
மக்களின் அடிப்படைத் தேவையான தரமான கல்வியையும், மருத்துவத்தையும் தரத் திறனற்ற திமுக அரசு, வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசுவது வெட்கக்கேடு என்றும் மூடப்பட்ட 207 அரசு பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திமுக ஒடுக்குமுறை மானக்கேடு முதல்வரே! இது பாசிச வெறியாட்டம்.. சீமான் கொந்தளிப்பு..!