தமிழகத்தில் நெல்மணிகளை விவசாயம் செய்து வரும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யாததால் நெல்மணிகள் முளைத்து வீணாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாமதமாக கொள்முதல் செய்யப்படுவதாகவும் நெல் மூட்டைகளை வீதியில் கிடத்தும் நிலை ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சம்பா சாகுபடியில் தற்போது விளைவித்த நெற்பயிர்கள் ஒருபுறம் மழையில் மூழ்கி விவசாயிகளுக்கு பெருநட்டம் ஏற்பட்டுள்ள சூழலில், மறுபுறம் ஏற்கனவே அறுவடை செய்த குறுவை சாகுபடி நெல் மூட்டைகளையும் திமுக அரசு கொள்முதல் செய்ய தாமதிப்பதன் காரணமாக நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்பதாக கூறியுள்ளார். வேளாண் பெருங்குடி மக்களின் கவலையும், கண்ணீரும் அதிகரித்துள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது என்றும் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, வெயிலிலும் மழையிலும் தங்கள் கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டியும், உரிய விவசாயிகள் காலங்காலமாகப் போராடி வருவதாகவும் கூறினார்.

ஆனால், திராவிட மாடல் திமுக அரசு உற்பத்தி செலவுக்கு இணையான, மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகின்றது என்றும் அக்குறைந்தபட்ச கொள்முதல் விலையிலும் உரிய நேரத்தில் நெல் கொள்முதலை திமுக அரசு செய்ய மறுப்பதுதான் கொடுமையிலும் பெருங்கொடுமை எனவும் தெரிவித்தார். ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இத்தனை தாமதத்திற்கு பிறகு தற்போது ஒன்றிய அரசிற்கு அனுமதிகோரி முதல்வர் வெறுமனே கடிதம் மட்டும் எழுதுவது ஏன் என்றும் நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகம் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நிலையில் அதற்கேற்ற உரிய கொள்முதல் ஏற்பாடுகளை அரசு செய்யத் தவறியது ஏன் எனவும் ஏழை விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் அவலம் எப்போது மாறும் என்றும் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய சேமிப்பு கிடங்குகளை கட்ட முடியாதது ஏன் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் முன் வைத்தார்.
இதையும் படிங்க: சட்டமன்றமும், நாடாளுமன்றமும் பல்லாங்குழி ஆடவா? என்ன சீமான் இதெல்லாம்? பாய்ந்தது FIR…!
பல நூறு கோடியில் மதுரையில் கலைஞர் ஜல்லிகட்டு அரங்கம், சென்னையில் கலைஞர் கலையரங்கம் கட்டும் திமுக அரசு, கார் பந்தயம் நடத்தவும், சமாதி கட்டவும் பல நூறு கோடிகளை வாரி இறைக்கும் திமுக அரசு நெல் சேமிப்பு கிடங்குகளை கட்டாமல் வெட்டவெளியில் தார்ப்பாய்களால் மூடி வைப்பது ஏன் எனவும் சாடினார். எனவே, சரியான கொள்முதல் விலையை குறுவை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டுமெனவும், தற்போதைய கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரி படுகை சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கச்சத்தீவு கேடுகெட்ட நாடகம்… முதல்வரா போஸ்ட் மாஸ்டரா? பூந்து விளாசிய சீமான்…!