ஊர்க்காவல் படையினர் காவல்துறையுடன் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். இதில் பொது நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள், மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பு ஆகியவை அடங்கும்.
இவர்கள் பொதுவாக தன்னார்வலர்களாக பணியாற்றினாலும், அவர்களுக்கு குறிப்பிட்ட கால பணிக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கி வருவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கு.. தாபாவில் போலீசார் ஆய்வு.. சிக்கிய தடயங்கள்..!!
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் ஊர்க்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் அப்பட்டமான உழைப்பு சுரண்டல் என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த சீமான், காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது முதல் பாதுகாப்புப் பணி வரை அனைத்துவகைக் காவல் பணிகளிலும் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருவதாக குறிப்பிட்டார்.
ஆனால் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்றுவரை வழங்கப்படவில்லை பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை என்றும் இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் வாடும் ஊர்க்காவல் படையினர், குடும்ப வறுமை தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் துயர நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் கூறினார்.
ஆகவே, ஊர்க்காவல் படையினரின் பணியை வரன்முறைப்படுத்தி அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமெனவும், அவர்களது பணி நாட்களை மாத முழுமைக்கும் உயர்த்தி காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: இனி இரவில் இதையெல்லாம் செய்யக்கூடாது - ரோந்து பணி காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!