சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதற்கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். மகளிர் உரிமைத்தொகை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
குலவிளக்கு என்ற திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டி தரும் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் ஐந்து லட்சம் மகளிருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்சியாக அதிமுக தனது முதற்கட்ட வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. இன்னும் பல வாக்குறுதிகள் வெளியாகும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக விவசாய சங்கத்தினர் கைது... கொடுமையின் உச்சம்...! சீமான் கண்டனம்..!
இந்த நிலையில், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அதிமுக அறிவிப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில் அரசு பேருந்து தரமாக உள்ளதா என கேள்வி எழுப்பினார். தற்போதைய அரசு பேருந்துகளில் அரசியல் தலைவர்கள் பயணிப்பார்களா என்று கேட்டுள்ளார். ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிர் அவமானப்படுத்தியதாக தெரிவித்தார். எங்கள் தாய்மார்களுக்கு தேவையான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போகிப் பண்டிகை.. திராவிட குப்பையை எரித்து போகி கொண்டாடுங்க... விளாசிய சீமான்...!