நெல்லையில் நேற்று நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், அ.தி.மு.க. - பாஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறினார். அவரது பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்ல பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். அமித்ஷா மமதையோடு பேசி இருப்பதாகவும் தமிழ்நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்படும் இரண்டு பேரில் ஒருவர் அமித் ஷா தான் என்றும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டுமென்று கூறுகிற அமித்ஷா, அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரைக் கூட அவர் உச்சரிக்கவில்லை என்றும் பல்வேறு நெருக்கடிகளின் அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. - பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்களால் நிச்சயம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்திருப்பதாக அவர் கூறுவதாகவும், கடந்த ஆட்சி காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் இன்றைக்கு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறுகிறது தவிர கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இல்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: கிரிமினல் வழக்குகள் மசோதா! நகலை கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்... மக்களவையில் கடும் அமளி...
ஆனால், 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ரபேல் விமான ஊழல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் முறைகேடுகள், தேர்தல் நன்கொடை பத்திர மோசடி, நெடுஞ்சாலைத்துறையில் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறிய பிறகும் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றார். அதேபோல, அதானி - அம்பானி போன்ற சில தொழிலதிபர்களுக்கு அரசு மூலம் சலுகைகள் வழங்கி வருமானத்தை பெருக்கி சொத்து குவித்ததை விட மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக நீட் திணிப்பு, மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்காக பரிந்து பேசும் அமித்ஷா, அதற்காக ரூபாய் 20 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கி விட்டு, 24,000 பேர் பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 609 கோடி ஒதுக்கியவர் என்று கூறினார்.
தமிழ் மொழிக்காக, திருக்குறளுக்காக அமித்ஷாவின் பேச்சு நீலிக் கண்ணீராக இருக்குமே தவிர, தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: உங்களுக்கு எங்க வலிக்குது.. பாகிஸ்தானை காப்பாத்துறீங்களா? காங்கிரசை பந்தாடிய அமித் ஷா..!