இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இத்தகைய கொடுமையான செயலை செய்து வருகிறது. மத்திய பாஜக அரசிடம் இலங்கை கடற்படையின் செயலை தடுத்து நிறுத்துமாறு பலமுறை கண்டித்து கூறியும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என கூறினார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவ கிராமங்களிடைய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இப்பிரச்சினையை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல் தேதி!! கூட்டணியில் இழுபறி!! மாநில காங்கிரசாருடன் ராகுல் காந்தி நாளை ஆலோசனை!
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா - இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடத்த கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று செல்வபெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இதுவரை கைது செய்திருக்கும் அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திமுக நிலைமை அதோகதி! தவெக போனா தப்பிச்சிக்கலாம்! ராகுல்காந்தி காதுகளுக்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்!