கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே நேற்று காலை 7:40 மணியளவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து, மூன்று பள்ளி மாணவர்களின் உயிரைப் பறித்து, பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் பள்ளியின் வேன், ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் இந்த கோர விபத்து நடந்தது. வேன் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்தது.

விபத்தில், திராவிடமணியின் மகள் சாருமதி (16) மற்றும் விஜயசந்திரகுமாரின் மகன் விமலேஷ் (10) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சாருமதியின் சகோதரர் செழியன் (15), புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. வேன் ஓட்டுநர் சங்கர் (47), மாணவர்கள் விஷ்வேஷ் (16), நிவாஸ் (13) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மீட்புப் பணியின்போது மின்சாரம் தாக்கி அண்ணாதுரை என்ற உள்ளூர் வாசியும் காயமடைந்தார்.
இதையும் படிங்க: அலட்சியத்தால் நடந்த கோர விபத்து.. கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
விபத்துக்கு காரணமாக, கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியம் சுட்டிக்காட்டப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ், ரயில் வருவதை அறிந்து கேட்டை மூடியதாகவும், ஆனால் வாகன ஓட்டிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, வேன் ஓட்டுநர் சங்கர், கேட் திறந்திருந்ததாகவும், பங்கஜ் அங்கு இல்லை என்றும் தெரிவித்தார். மாணவர் விஷ்வேஷ், விபத்துக்குப் பிறகும் கேட் கீப்பர் வரவில்லை என குற்றம்சாட்டினார். பொதுமக்கள் ஆத்திரத்தில் பங்கஜைத் தாக்க, அவர் காவல்துறையால் மீட்கப்பட்டு, கொலை மற்றும் மரணத்துக்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தெற்கு ரயில்வே, பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து, விபத்துக்கு மன்னிப்பு கோரியது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்; ரயில்வே தரப்பிலும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனிடையே விபத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார்,
ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளூர் மொழி புரியாதவர்களை பணியில் அமர்த்துவது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக செம்மங்குப்பம் பகுதிக்கு புதிய ரயில்வே கேட் கீப்பராக தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரின் பணி அனுபவம் 2 ஆண்டுகள் ஆகும். ரயில்வே விதிகளை பின்பற்றி கவனமுடன் பணியாற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும்
இந்த விபத்து, ஆளில்லா ரயில்வே கேட்களின் ஆபத்து மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க தெற்கு ரயில்வே நிதி ஒதுக்கியும், மாவட்ட ஆட்சியர் அனுமதி தாமதமானது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பணி நியமனங்கள் அவசியம் என பேச்சு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!