அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக எம்ஜிஆர், ஜெயலலிதா தொட்டு வணங்கினார். தொடர்ந்து பேசிய அவர், 1972ல் எம்ஜிஆரை தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக என்றும், கிளை கழக செயலாளராக தனது பயணத்தை தொடங்கியதாகவும் தெரிவித்தார். மக்கள் மனதில் குடி கொண்டிருக்கும் மற்றும் மக்களால் பாராட்டப்படும் தலைவராக விளங்கியவர் எம்ஜிஆர் என்று கூறினார். சத்யா ஸ்டூடியோவுக்கு அழைத்து தன்னை மனதார பாராட்டியவர் எம்ஜிஆர் என்றும் சத்தியமங்கலத்தில் தன்னை போட்டியிடுமாறு சொன்னதாகவும் தெரிவித்தார்.
ஏழை மக்களின் பசிப்பிணையை போக்கி, ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கி, ஒரு முதலமைச்சர் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்று எம்ஜிஆர் தமிழகத்துக்கு பெருமையை சேர்த்ததாகவும், அவரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா பொறுப்பேற்றார் என்றும் தெரிவித்தார். ஆளுமை மிக்க மற்றும் பல் மொழிகள் பேசக்கூடிய, திறமை மிக்க தாங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியதாகவும் அதைப்போல சிறந்த ஆட்சியை ஜெயலலிதா தந்ததாகவும் தெரிவித்தார். ஆன்மீகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமையாக ஜெயலலிதா திகழ்ந்ததாகவும், ஜெயலலிதா மறைந்த பிறகு, இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வரும் பொழுது அந்த சோதனையில், இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது என்ற முறையில் அன்றைய பொதுச்செயலாளராக சசிகலாவை ஒருமனதாக நியமித்ததாகவும், மீண்டும் முதலமைச்சர் யார் என்று வரும் பொழுது எடப்பாடி பழனிச்சாமியை பரிந்துரைத்ததாகவும் கூறினார்.

இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போதும் இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தனது பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். 2016 க்கு பின் தேர்தல் களம் போராட்ட களமாக மாறிவிட்டது என்பதை நாம் அறிவோம் என்றார். 2019, 2021, 2024 உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்தபோது களத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார். 2024 பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் 30 இடங்களை வெற்றி பெற்று இருக்கலாம் என்றும் அதிமுகவில் தொய்வு ஏற்பட்டதாக மற்றும் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிடம் கூறியதாகவும் அதனை ஏற்கும் நிலையில் அவர் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: அவர் சொல்லட்டும்... நான் பேசுறேன்! செங்கோட்டையனின் அதிருப்தி குறித்து ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார். வெளியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார். வெற்றி வாகை சூடுவதற்கு, நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். மனமகிழ்ச்சியோடு எதிர்காலத்தை நோக்கி மக்கள் நினைப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார். விரைந்து அதனை செய்யுங்கள் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் யார் யாரெல்லாம் இந்த மனநிலையில் இருக்கிறார்களோ அவர்களை இணைத்து செயல்படுத்த முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: மனம் திறக்கும் செங்கோட்டையன்! சாரை சாரையாக திரளும் ஆதரவாளர்கள்