தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொள்முதலில் அரசுக்கு சுமார் 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கூறின. இந்த புகாரை மையப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விவகாரம் 2021-2023 காலத்தில் TANGEDCO சார்பில் 10 டெண்டர்கள் மூலம் சுமார் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதுடன் தொடர்புடையது.
மொத்த டெண்டர் மதிப்பு சுமார் 1,182 கோடி ரூபாயாகும். 500 kVA திறன் கொண்ட மின்மாற்றியின் சந்தை மதிப்பு சுமார் 7.89 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், டெண்டரில் அதன் விலை 12.49 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த 58.3 சதவீத விலை உயர்வு காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாகவும், அதனால் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்கிடப்பட்டது.

இந்த முறைகேடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜியின் பதவிக்காலத்தில் நடைபெற்றதாக புகார் சுட்டிக்காட்டப்பட்டது. அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக சார்பில் தனித்தனியாக பொது நலன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களில் ஆவணங்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த நிலையில், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் விவகாரத்தில் முறைகேடும் நடைபெறவில்லை என செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார். டான்ஜெட்கோவில் டென்டர்களை பிரித்துக் கொடுப்பது என்பது தான் வழக்கம் என்று கூறினார். ஒரு துளி நயா பைசா கூட டான்ஜெட்கோவிற்கு இழப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்திலும் இதே நடைமுறைதான் இருந்தது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓசூரில் வெல்லப்போவது யார்?! ரூ.15கோடி வரை பறக்கும் பந்தயம்!! திமுக - அதிமுக இடையே பெட்டிங் பயங்கரம்!