கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள சிவகங்கையைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான கருப்பசாமி (சதீஷ்), கார்த்திக் (காளீஸ்வரன்) மற்றும் தவசி (குணா) ஆகிய மூன்று குற்றவாளிகள், அதே நாள் காலையில் குரும்பபாளையம் அருகே ஒரு ஆட்டு வியாபாரியைக் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரக் குற்றவாளிகளை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு செய்யப்படவுள்ளது.
கடந்த மாதம் நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரில் காரில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று, காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, அந்த மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளையும் மறுநாள் (நவம்பர் 3) போலீசார் காலில் சுட்டுப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட இந்தக் குற்றவாளிகளைச் சமீபத்தில் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது, நவம்பர் 2ஆம் தேதி காலையில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் வெளியானது.
இதையும் படிங்க: துடிக்க துடிக்க மனைவி கொலை.. சடலத்துடன் WhatsApp Status வைத்த கணவன்..!! கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன..??
குரும்பபாளையம் அருகே உள்ள மேல கவுண்டன்புதுரைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி தேவராஜ் (வயது 55). நவம்பர் 2ஆம் தேதி காலையில், இந்தக் குற்றவாளிகள் மூவரும் சேரப்பாளையம் காட்டுப் பகுதியில் மது அருந்திக் கொண்டு அமர்ந்துள்ளனர். ஆட்டு வியாபாரம் செய்து வந்த தேவராஜ், அவர்களைப் பார்த்து, "ஏன் இங்கு நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்கள்?" என்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூவரும் தேவராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயங்களுடன் மயக்கம் அடைந்து விழுந்த தேவராஜ், யாரும் பார்க்காததால் உயிரிழந்துள்ளார்.
தேவராஜ் திடீரென மாயமானது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் தேடியபோது, சேரப்பாளையம் காட்டுப் பகுதியில் பிணமாகக் கிடந்த தேவராஜை மீட்டனர். முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரும் தான் தேவராஜை அடித்துக் கொன்றது உறுதியாகியுள்ளது.
கொலை செய்த பின் இரவில், அருகில் உள்ள பிருந்தாவன் நகருக்கு வந்து மீண்டும் மது அருந்தியபோதுதான், அங்கு காரில் இருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல்கள் கோவை மாவட்ட போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேவராஜ் கொலை வழக்கில் இந்தக் குற்றவாளிகள் மூவரையும் கோவில்பாளையம் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதற்காகக் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட காவல்துறை நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளது. ஒரே நாளில் இரண்டு கொடூரக் குற்றங்களைச் செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி..!! உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்..!! ட்ரோன்கள் பறக்க தடை..!!