விழுப்புரத்தில் சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளரிடம் விசில் அடித்தும், ஆபாசமாக பேசியும் அத்துமீறிய இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே, சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த நான்கு இளைஞர்கள் சிங்கப்பெண் படை போலீசாரை கேலி செய்யும் வகையில் விசில் அடித்து அவர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றதாக கூறப்படுகிறது.
அவர்களில், பானாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தினீப் குமார் என்பவர், சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பிரபாவதியிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசியதுடன், விசில் அடித்து அவரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விழுப்புரம் அதிமுக மா.செ. கார் மீது கல்வீச்சு..! CV சண்முகம் தரப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு..! அதிமுகவில் பதற்றம்..!!
இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி ஆய்வாளர் பிரபாவதி, உடனடியாக அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிங்கப்பெண் சிறப்புப் படையினருடன் இணைந்து விசாரணை நடத்தினர். அப்போது, தினீப் குமார் மதுபோதையில் இருந்ததும், பெண் போலீசாரிடம் அத்துமீறி நடந்துகொண்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, இன்று காலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரியிடமே, மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களில் பெண்களிடம் அத்துமீறி நடக்கும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: செருப்பால் அடித்து, வாயை பிளேடால் கிழித்து... மறைவிடத்தில் வைத்து சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வெளியான பகீர் பின்னணி...!