சிசிவகங்கை அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது பிரபல ரவுடி சுள்ளான் மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மதன், பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டு ரவுடியாக அறியப்பட்டவர். இரட்டைக் கொலை உள்ளிட்ட சுமார் 15 வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்தன.2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லங்குடி அருகே மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய சகோதரர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மதன் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
அந்த வழக்கு ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பது தொடர்பான தகராறில் இருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் அடைக்கப்பட்ட அவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.அக்டோபர் 18 ஆம் தேதி ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காணவும் தனது காளையைப் பங்கேற்க வைக்கவும் மதன் நண்பர்களுடன் சென்றிருந்தார். மதியம் சுமார் ஒன்று முதல் இரண்டு மணி வரை பள்ளிக்கூடம் அருகே நின்றுகொண்டிருந்த போது, ஐந்து இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த சுமார் பதினொரு பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்தது.

தப்பி ஓடிய மதனை அந்தக் கும்பல் விடாமல் விரட்டிச் சென்று அருகிலிருந்த கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து சரமாரியாக வாள் மற்றும் அரிவாளால் வெட்டியது. கை, கால், முகம் உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் கடும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்பல் உடனடியாகத் தப்பிச் சென்றது.தகவலறிந்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழா.. அக்.31 வரை சிவகங்கையில் 12 நாட்களுக்கு 163 தடை உத்தரவு அமல்!
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே மானாமதுரையைச் சேர்ந்த பாபு, பாலமுருகன் மற்றும் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பிரதீப் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டனர்.இந்த நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ், சிவகங்கையைச் சேர்ந்த சந்தோஷ், ஜெயமாணிக்கராஜ், மு த்துசூர்யா ஆகிய நால்வரும் கூடுதலாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆறு தனிப்படைகள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதையும் படிங்க: சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!