தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் சிவகுமாரால் 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் சிவகுமார் கல்வி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை, கல்வி, கலை, விளையாட்டு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவி செய்வதை முதன்மை இலக்காகக் கொண்டு, கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்த அறக்கட்டளை, பிளஸ்-2 தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கிறது.

நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட அனுபவங்களே இந்த அறக்கட்டளையின் உருவாக்கத்திற்கு உந்துதலாக இருந்தன. ஏழ்மையில் வளர்ந்த அவர், கல்வியின் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்பதை உணர்ந்து, மாணவர்களுக்கு உதவ முனைந்தார். அறக்கட்டளையின் மூலம், அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்துகிறது. உதாரணமாக, ரயில் விபத்துகளை முன்கூட்டியே கண்டறியும் கருவி மற்றும் ஈரப்பதம் கண்டறியும் கருவி போன்றவை மாணவர்களால் உருவாக்கப்பட்டு பாராட்டப்பட்டன.
இதையும் படிங்க: இன்னைக்கு ஆசிரியர் தினம்! அந்த வாக்குறுதி ஞாபகம் இருக்கா முதல்வரே? வாட்டி எடுத்த நயினார்
அகரம் அறக்கட்டளை என்ற பெயரில், சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா 2006இல் தொடங்கிய அமைப்பும் இதே நோக்கத்தில் செயல்படுகிறது. இவை இரண்டும் இணைந்து, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை விரிவாக்கி, சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கின்றன. சிவகுமார் கல்வி அறக்கட்டளை, தமிழ்நாட்டில் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
இந்நிலையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 46வது ஆண்டு விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் +2 முடித்து கல்லூரியில் சேர்ந்து உதவி தேவைப்படும் சுமார் 25 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ரூ. 1,00.000 நிதி உதவி வழங்கினார்.
தருமபுரி, விழுப்புரம் பகுதிகளை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள கோடகரை தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியரை நியமித்து கல்வி பணிகளை முன்னெடுத்து வரும் 'வாழை' தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1,50,000 நிதி உதவியும் வழங்கினார்.
மூத்த ஓவிய கலைஞர் 'மணியம்' செல்வனின் கலை பங்களிப்பை பாராட்டி அவருக்கு ரூ.1,00,000 நிதி வழங்கினார். மேலும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி மேல்நெல்லிமரத்தூரில் அமைந்திருக்கும் பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 40,000 வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றிய சிவகுமார் “கல்வியே வாழ்க்கையின் அடித்தளம்; உங்களின் உழைப்பும், உறுதியும் உங்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்,” என்று கூறி ஊக்கப்படுத்தினார். மேலும், அறக்கட்டளையின் நோக்கமான கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்து பங்களிப்பதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில், பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வி பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ் மேல் தீராக் காதல் கொண்டவர்.. ஜி.யு போப் கல்லறையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை..!!