சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறை பகுதி, மாசி மகம் பெருவிழாவின்போது மஞ்சுவிரட்டு நடக்கும் இடமாக புகழ்பெற்றது. இந்த ஆண்டு மாசி மகத்தை ஒட்டி நடைபெற்ற இந்த பாரம்பரிய விழாவில் திடீரென ஏற்பட்ட துயர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மாசி மகம் என்றாலே தமிழகத்தின் பல பகுதிகளில் கோயில் திருவிழாக்கள், தீர்த்தவாரி, மஞ்சுவிரட்டு போன்றவை கோலாகலமாக நடைபெறும்.
சிங்கம்புணரி அருகே பாலதண்டாயுதபாணி கோயில் திருவிழாவுடன் இணைந்து வரும் இந்த மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. குன்றின் சரிவுகளில் அமர்ந்து, பாறை அடிவாரத்தில் உள்ள வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை ரசிப்பது இங்கு வழக்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு, உள்ளூர் மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பது.

ஆனால் இந்த முறை விஷயம் வேறு விதமாக மாறியது. காளைகள் அவிழ்த்து விடப்பட்டவுடன், சில காளைகள் எதிர்பாராத விதமாக கூட்டத்தின் நடுவே புகுந்து முட்டத் தொடங்கின. கட்டுப்பாட்டை மீறி ஓடிய அந்த காளைகள், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை நேரடியாக தாக்கின. இதில் ராமநாதன் (23), சுந்தரராஜ் (48) உள்ளிட்டோர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: விசில் ஊத தடை! சிவகங்கை திமுக கவுன்சிலரின் செயலால் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி!
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் நடந்தவுடன் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், தீயணைப்பு வீரர்கள், மருத்துவக் குழுக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கும், அருகிலுள்ள பெரிய மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!