சென்னையில் பார்சல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் மூலம் நடைபெற்று வரும் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் தடுப்பதற்காக, காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தனியார் கூரியர் மையங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பார்சல்கள் மூலமாகவும், வெளி இடங்களுக்கு அனுப்பப்படும் பெரிய மூட்டைகள் வழியாகவும் ஹெராயின், மெத்தம்பெட்டமைன், அபின், உயர்ரக போதைப் பவுடர்கள் மற்றும் மாத்திரைகள் கடத்தப்படுவதைத் தடுப்பது இச்சோதனையின் முதன்மை நோக்கமாகும். ஆவடி காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த விரிவான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மணலி, மாத்தூர், விச்சூர் மற்றும் மணலி புதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் பார்சல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் இச்சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை மோப்பம் பிடிப்பதில் அசாத்திய திறமை படைத்த 'பெல்ஜியன் மாலினோயிஸ்' என்ற ரகத்தைச் சேர்ந்த 'கண்ணகி' என்ற பயிற்சி பெற்ற மோப்ப நாய் இச்சோதனையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!
துறைமுகப் பகுதிகள் மற்றும் வடசென்னையின் தொழிற்சாலைகள் நிறைந்த மணலி மண்டலத்தில் உள்ள கூரியர் குடோன்கள் மற்றும் முன்பதிவு மையங்களில் 'கண்ணகி' மோப்ப நாயுடன் போலீசார் நடத்தி வரும் இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், கடத்தல்காரர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!