அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ரூ.98.25 கோடி மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிகாரியைத் தானாக முன்வந்து வழக்கில் ஒரு எதிர்மனுதாரராகச் சேர்த்துச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காகத் தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நபர்களுக்குச் சாதகமாக டெண்டர் வழங்கியதில் அரசுக்கு சுமார் 98.25 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இவ்வழக்கில் உரியக் காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு அமைப்பான 'அறப்போர் இயக்கம்' சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மீண்டும் விரிசல்... எஸ்.பி.வேலுமணிக்கு ஷாக் கொடுத்த தங்கமணி... சல்லி சல்லியாய் நொறுங்கும் அதிமுக...!

இவ்வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குத் தொடர 2024 பிப்ரவரியில் அனுமதி பெறப்பட்ட நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கே.எஸ். கந்தசாமி மற்றும் கே. விஜயகார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோருவதிலும் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதிலும் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பிப் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் பதிலளிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனைப் பரிசீலித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இவ்வழக்கில் மத்திய அரசு அதிகாரியைத் தானாக முன்வந்து ஒரு எதிர்மனுதாரராக இணைத்து உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் இத்தனை மாதங்கள் காலதாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் ஆவி எஸ்.பி.வேலுமணியை சும்மாவே விடாது.! Ex.அமைச்சர் பொன்னையன் விமர்சனம்.!