தை பூசம் பண்டிகை மற்றும் வரும் வார இறுதி நாட்களை (ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1) ஒட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் (TNSTC) சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெள்ளி (30.01.2026), சனி (31.01.2026) மற்றும் ஞாயிறு (01.02.2026) ஆகிய மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். இதனை எதிர்கொள்ளும் வகையில், தினசரி இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கலுக்கு ஊருக்கு போக ரெடியா மக்களே..!! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
குறிப்பாக, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு ஜனவரி 30-ஆம் தேதி 360 சிறப்பு பேருந்துகளும், ஜனவரி 31-ஆம் தேதி 485 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், சென்னை கோயம்பேட்டு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களிலும் தலா 60 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் மொத்தம் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு திரும்பும் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தொலைதூர பயணத்திட்டமுள்ளவர்கள் www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC மொபைல் செயலி மூலம் முன்கூட்டியே இடங்களை முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை திறம்பட கண்காணிக்கும் வகையில் அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய எண்ணிக்கையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஏற்பாடுகள் மூலம் பண்டிகைக் காலப் பயணிகள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் இவ்வசதிகளை பயன்படுத்தி தங்கள் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீங்களாம் ஒரு முதல்வர்? கிரிமினல்களின் சொர்க்க பூமி தமிழ்நாடு...! அதிமுக கடும் கண்டனம்..!