திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழா, லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் மிக முக்கியமான திருவிழாவாக விளங்குகிறது. சித்திரை மாத பௌர்ணமியன்று அண்ணாமலையார் மலையைச் சுற்றி வரும் கிரிவலம் இந்த விழாவின் சிறப்பம்சமாகும்.
இந்த ஆண்டு 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 9:52 மணிக்கு பௌர்ணமி திதி தொடங்கி, மே 1ஆம் தேதி இரவு 11:08 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. கோயில் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமி கிரிவலம்..! தி.மலையில் ஏற்பாடுகள் தீவிரம்..!
அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கோயில் நீண்ட நேரம் திறந்திருக்கும். மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காக தனி வரிசை ஏற்பாடு செய்யப்படும். இதனிடையே, சித்ரா பெளர்ணமியை ஒட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மற்றும் மே 1 மற்றும் 2ம் தேதிகளில் காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!