மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது திமுக அரசின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலை வீழ்த்தி, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைய பொதுக்கூட்டம் ஒரு மாநாட்டைப் போல 5 லட்சம் தொண்டர்களுடன் எழுச்சியாக அமைந்தது என்றார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம், பெண்கள் பாதுகாப்பற்ற சூழல் என ஊழல் ஆட்சி நடக்கிறது; இந்தத் தீயசக்தியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டனர் எனச் சாடினார். திமுகவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அண்ணா அறிவாலயத்தின் மாடியில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது, கீழே அமர்ந்து கூட்டணி பேசியவர்கள் திமுகவினர்; எங்களை விமர்சிக்க அவர்களுக்குத் தகுதியில்லை எனப் பதிலடி கொடுத்தார். மேலும், எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது, வரும் தேர்தலில் 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு டிடிவி தினகரனுடன் கைகோர்த்தது குறித்துக் கேட்டபோது, நாங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கிறோம்; எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டோம்" என இபிஎஸ் கூறினார். நாங்கள் அனைவரும் புரட்சித்தலைவி அம்மா வளர்த்த பிள்ளைகள்; தமிழகத்தின் நன்மைக்காக ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்றார். டிடிவி தினகரன் பேசுகையில், கூட்டணியில் இணைய எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை; முழுமனதோடு இணைந்துள்ளோம் எனத் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: “விஜயை மிரட்டுகிறது பாஜக!” - சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் அதிரடி!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நிலவும் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கம் தான் இன்றைய கூட்டம் எனத் தெரிவித்தார். தமிழகத்திற்குப் பல புதிய திட்டங்களை வழங்கப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாகவும், 2026-இல் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார். கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளதாகவும், அவை யார் என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “இரட்டை எஞ்சின் அல்ல... அது டப்பா எஞ்சின்!” மதுராந்தகம் மேடைக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த முதலமைச்சர்!