திருநெல்வேலி கேடிசி நகர் ரஹ்மத் நகர் மேம்பாலத்தில் மாடு ஒன்று குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரெனப் பிரேக் பிடித்ததில் வேன் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம், ரெட்டியார்பட்டி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் இன்றைய தினம் பணியை முடித்துவிட்டு, நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேன் மூலம் கீழநத்தம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ரெட்டியார்பட்டியிலிருந்து புறப்பட்ட வேன், நெல்லை கேடிசி நகர் ரஹ்மத் நகர் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மாடு சாலைக்குக் குறுக்கே பாய்ந்தது. மாட்டின் மீது மோதி விபத்து ஏற்படாமல் இருக்க, வேனின் ஓட்டுநர் உடனடியாகப் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய வேன், கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதையும் படிங்க: “கஸ்டடி முதல் வீடு வரை… மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார்!”
பயங்கரச் சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வேனுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர். இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோருக்குக் கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மீட்கப்பட்ட அவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தின் காரணமாகக் கன்னியாகுமரி - நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் குறுக்கே மாடு வந்ததால் ஏற்பட்ட இந்த விபத்து, நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை அவிழ்த்து விடுவதால் ஏற்படும் அபாயங்களை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: “டெல்லி காற்று மாசு… ‘10 மாதத்துல சரி செய்ய முடியாது!’ – முன்னாள் அரசை குற்றம்சாட்டிய ஆளும் கட்சி”