ஈரோடு: வழக்கறிஞர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், தேவையான மாவட்டங்களில் POCSO மற்றும் போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை வரும் பொங்கல் பண்டிகைக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அருகே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இரு மாநிலங்களையும் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், தகுதியான வழக்கறிஞர்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை? குழந்தையின் டிஎன்ஏ சோதனையில் அதிர்ச்சி திருப்பம்!
மாநாட்டில் பேசிய கூட்டமைப்பின் கவுரவத் தலைவர் எஸ்.பிரபாகரன், வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சேமநல நிதி உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீடு தொடர்பான கோரிக்கைகளையும் அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், வழக்கறிஞர்களின் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், பொதுமக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில், தேவையான மாவட்டங்களில் POCSO மற்றும் போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் பொங்கல் பண்டிகைக்குள் இதற்கான பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், சேமநல நிதியை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். குடும்பத்தினருக்கான மருத்துவக் காப்பீடு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால், வழக்கறிஞர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் பலவற்றுக்கு அரசு தரப்பில் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: வண்டலூர் பள்ளியில் மாணவிக்கு பாலியல் கொடுமை? ‘மூடி மறைக்க முயற்சி’ – கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!