சென்னை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. சென்னை, கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வங்கக்கடலில் உருவான 'மோந்தா' புயல் சில நாட்களிலேயே அதிதீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரா கரையில் தாக்கியது.
இப்போது அடுத்தடுத்து தீவிர புயல்கள் வரும் என்றும், பருவமழை ஜனவரி முதல் பாதி வரை நீடிக்கும் என்றும் பிரபல வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணித்துள்ளார். இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கும். ஆனால் இந்த முறை ஜனவரி பாதி வரை தொடரும் என்று ஹேமச்சந்தர் கூறுகிறார். இதற்கு முக்கிய காரணம் கடல் வெப்பநிலை.
இதையும் படிங்க: இனி வேண்டாம் வன்முறை!! ஆயுதங்களை கைவிட்ட பெண்கள்! நக்சல்கள் 51 பேர் சரண்..!!
கிழக்கு இந்திய பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் மிகவும் சூடாக உள்ளது. அதேநேரம் சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நீடிக்கிறது. இதை 'ஐஓடி' (இந்திய பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிகழ்வு) என்று அழைக்கிறார்கள். இது புயல் உருவாக்க உதவும் சூழலை உருவாக்குகிறது.

ஹேமச்சந்தர் கூறுகையில், "கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவு ஐஓடி தீவிரமாக உள்ளது. அடுத்த 2 வாரங்களில் இன்னும் வலுவடையும். இதனால் அடுத்தடுத்து வலுவான புயல்கள் உருவாகும். 2019-ல் அரபிக்கடலில் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டது. அப்போது இரண்டு புயல்கள் வந்தன. ஒன்று அதிதீவிரம், இன்னொன்று தீவிரம். சில தாழ்வு மண்டலங்களும் உருவாகின.
இப்போது அதைவிட வலுவான புயல்கள் வரலாம். தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும். ஆனால் ஜனவரி பாதி வரை மழை நீடிக்கும். இந்த முறை சராசரியைவிட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.
இந்திய வானிலைத் துறையும் (ஐ.எம்.டி) இதை உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில் சராசரி 44 செ.மீ மழைக்கு பதிலாக 50 செ.மீ வரை பெய்யலாம் என்று கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், வட தமிழ்நாடு, கரையோரப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும்.
விவசாயிகளுக்கு நல்லது என்றாலும், வெள்ளம், மண் அரிப்பு போன்ற பிரச்சினைகள் வரலாம். மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஹேமச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மகளை களமிறக்க ராமதாஸ் மாஸ்டர் ப்ளான்!! தருமபுரியில் போட்டி! திமுக கூட்டணிக்கு தூது! அன்புமணி அப்செட்!