தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 5 மாநிலத் தேர்தல்களும் முடிவுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் 'திராவிட மாடல்' ஆட்சி தொடருமா அல்லது புதிய மாற்றங்கள் நிகழுமா என்பது குறித்த மெகா ட்விஸ்ட்கள் இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. என்டிடிவி (NDTV) மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகிய நிறுவனங்கள் திமுக கூட்டணிக்கு 125 முதல் 145 இடங்கள் வரை கிடைக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளன. அதே சமயம், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் நிறுவனம் ஒரு படி மேலே சென்று திமுக கூட்டணிக்கு 145 முதல் 160 இடங்கள் வரை கிடைக்கும் எனக் கணித்துள்ளது. அக்னி நியூஸ் சர்வீஸ் 169 இடங்களை திமுக-விற்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் திமுக மீண்டும் தனிப்பெரும் சக்தியாக அரியணை ஏறுவது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு வலுவான போட்டியை வழங்கியுள்ளது எக்ஸிட் போல் முடிவுகளில் எதிரொலிக்கிறது. மேட்ரிஸ் (Matrize) நிறுவனம் அதிமுக கூட்டணிக்கு அதிகபட்சமாக 87 முதல் 110 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. பிற நிறுவனங்களான என்டிடிவி 65-80 இடங்களையும், ரிபப்ளிக் டிவி 65-85 இடங்களையும், சாணக்யா 50-65 இடங்களையும் அதிமுக-விற்கு வழங்கியுள்ளன. இதன் மூலம் அதிமுக ஒரு பலமான எதிர்க்கட்சியாகச் சட்டமன்றத்தில் அமரும் என்பது உறுதியாகிறது.
இதையும் படிங்க: நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!
அதே நேரத்தில், இந்தத் தேர்தலின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் தேர்தலிலேயே கணிசமான இடங்களைப் பிடித்து அதிரடி காட்டியுள்ளது. என்டிடிவி கணிப்பின்படி 18 முதல் 24 இடங்களையும், ரிபப்ளிக் டிவி கணிப்பின்படி 16 முதல் 26 இடங்களையும் தவெக கைப்பற்றும் எனத் தெரிகிறது. சாணக்யா 13 முதல் 18 இடங்களையும், மேட்ரிஸ் 10 முதல் 12 இடங்களையும் விஜய்யின் கட்சிக்குப் பகிர்ந்துள்ளன. இது தமிழகத்தின் இருதுருவ அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியின் வலுவான வருகையை உறுதிப்படுத்தியுள்ளது.
மற்ற கட்சிகளான நாம் தமிழர் மற்றும் இதர அமைப்புகளுக்குச் சில நிறுவனங்கள் 1 முதல் 6 இடங்கள் வரை கிடைக்கும் எனக் கணித்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 4-ஆம் தேதி காலை வரை இந்த எக்ஸிட் போல் முடிவுகள் குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் அனலைப் பறக்கவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கணிப்புகள் உண்மையிலேயே தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்குமா அல்லது எக்ஸிட் போல்களையும் தாண்டிய ஒரு மெகா ட்விஸ்ட் காத்திருக்கிறதா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். தற்போதுள்ள சூழலில், பெரும்பாலான நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றே ஒருமித்த கருத்தை முன்வைத்துள்ளன.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்! 85.15% வாக்குப்பதிவு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!