தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 85.15 சதவீத வாக்குப்பதிவு குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முனைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காகவே இந்த இமாலயப் பதிவை நிகழ்த்தியுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ள வாக்காளர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ள அன்புமணி மாற்றத்தை விரும்பி, புதிய ஆட்சி மலர வேண்டும் என்ற எண்ணத்தில் திரண்டு வந்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதிப்பவர்கள் மற்றும் எவ்வித வன்முறையுமின்றி அமைதிப்புரட்சி செய்பவர்கள் என்பதை இந்தத் தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது எனப் புகழ்ந்துள்ளார்.

தற்போதைய ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியே இந்த உயர்வான வாக்குப்பதிவுக்குக் காரணம் என அவர் விமர்சித்துள்ளார்: ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பில் இருந்த மக்கள், அதை அகற்றுவதற்காகவே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர என அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். பதிவான வாக்குகள் அனைத்தும் ஆட்சி மாற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன என்பதைச் சாமானிய மக்களாலும் தற்போது புரிந்து கொள்ள முடிகிறது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அன்புமணி எம்.பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!
தமிழகத் தேர்தலில் இம்முறை ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்கள் (85.76%) அதிக ஆர்வம் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகப் பாமக செல்வாக்கு மிக்க வட மாவட்டங்களில் பதிவான அதிகப்படியான வாக்குகள், தங்களுக்குச் சாதகமாக அமையும் என அக்கட்சித் தலைமை கருதுகிறது.
தமிழகத்தில் எவ்விதப் பெரிய அசம்பாவிதங்களும் இன்றித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்தத் தீர்ப்பு, வரும் மே மாதம் வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: சிறையில் இருப்போர் வாக்களிக்க முடியாது! ஹரி நாடார் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!