ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அத்துமீறிக் கைது செய்துள்ளதற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

இன்று (06.08.2026) ராமநாதபுரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, அவர்களின் விசைப்படகில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு நெடுந்தீவு கரையை ஒட்டித் தரைதட்டி நின்றுள்ளது. இந்தச் சூழலில், சர்வதேசக் கடல் எல்லைக்கோட்டைத் (IMBL) தாண்டியதாகப் பொய்க் குற்றம் சாட்டி, அந்தப் படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்துக! மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கோரிக்கை!

இலங்கை கடற்படையினரின் இந்தத் தொடர் கைது நடவடிக்கைகள் பாக் ஜலசந்திப் பகுதியை நம்பி வாழும் கடலோர மீனவச் சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையையும், கடுமையான பொருளாதார நிலையற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு உடனடியாக உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிதாகக் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் உட்பட ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் வாடும் அனைத்துத் தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் மீட்டுத் தாயகம் திருப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற அத்துமீறல்களும் கைது நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் நிகழாமல் இருக்க, இருநாடுகளுக்கு இடையேயான 'கூட்டுச் செயல்பாட்டுக் குழு' (Joint Working Group - JWG) மூலமாக உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இதில் உடனடியாகத் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!