2025- 26 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது 1986-ஆம் ஆண்டுமுதல் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். அவ்வரிசையில் 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட இருக்கிறது.
சமூகநீதி கிடைக்கப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு “தந்தை பெரியார்” விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது வழக்கறிஞர் அ.அருள்மொழி- க்கு வழங்கப்பட இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 27 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருது சிந்தனைச் செல்வனுக்கு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: கைத்தறி, கதர் துறை சார்பில் விருதுகள்... விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு...!
தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்குப் பேரறிஞர் அண்ணா விருது 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது அமைச்சர் துரைமுருகன்- க்கு வழங்கப்படுகிறது.
பெருந்தலைவர் அடிச்சுவட்டில் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் பெருந்தலைவர் காமராசர் விருது, எஸ்.எம்.இதயத்துல்லாவிற்கு வழங்கப்பட இருக்கிறது.
பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர், பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997-ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது. இதுவரை 28 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 89 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது 1979-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது. இதுவரை 46 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது முதுமுனைவர் வெ.இறையன்புக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 23 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் ஆண்டுக்கான விருது முனைவர் சு.செல்லப்பாவுக்கு வழங்கப்படுகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர் விருது" 2024-தோற்றுவிக்கப்பட்டது . 2025 ஆம் ஆண்டு ஆண்டுக்கான இவ்விருது, விடுதலை விரும்பிக்கு வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலமா? உண்மையை அம்பலப்படுத்திய TN FACT CHECK..!