சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.2,500 ரொக்கப் பணமும் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டன.
அதன்பிறகு திமுக ஆட்சியில் 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் ரூ.1,000 ரொக்கப் பணமும் தொகுப்பும் வழங்கப்பட்டன. ஆனால், 2025-ஆம் ஆண்டு ரொக்கப் பணம் இல்லாமல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், வரும் பொங்கல் பண்டிகையின்போது பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு ரூ.3,000 கன்பார்ம்! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! காத்திருக்கும் ட்விஸ்ட்!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். பொதுமக்களிடமும் ரூ.3,000 அல்லது ரூ.4,000 அல்லது ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பாக இன்று (டிசம்பர் 23) சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் அரு. சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் உள்ளிட்டோர் மற்றும் துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.

இந்தக் கூட்டத்தில் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள், அதற்கான செலவு மதிப்பீடு, கூடுதலாக வழங்கப்படும் ரொக்கப் பணத்தின் அளவு ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களின்படி, பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும். மேலும், ரொக்கப் பணமாக ரூ.5,000 வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் அரிசி அட்டைதாரர்கள் சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர். இவர்களுக்கே பொங்கல் பரிசுத் தொகுப்பும் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஜனவரி முதல் வாரத்தில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக தொகுப்பும் ரொக்கமும் விநியோகிக்கப்படும் எனத் தெரிகிறது.
தேர்தல் ஆண்டு என்பதால் இந்தப் பரிசு அறிவிப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் எனக் கூறப்படுகிறது. கூட்டத்துக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேட்டது ரூ.24, 673 கோடி! தந்தது ரூ.4,136 கோடி! பேரிடர்களுக்கு நிவாரண நிதி குறித்து ஸ்டாலின் தடாலடி!