தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் முக்கிய ரயில் பாதை திட்டங்களை விரைவாக நிறைவேற்ற, கர்நாடகா அரசு பின்பற்றும் கூட்டுத் திட்ட முறைபோல் தமிழக அரசும் ரயில்வேயுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல முக்கிய திட்டங்கள் நீண்ட காலமாக நிறைவடையாமல் இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை–மாமல்லபுரம்–கடலூர் 179 கி.மீ., திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை 70 கி.மீ., திண்டிவனம்–நகரி 179 கி.மீ., அத்திப்பட்டு–புத்தூர் 88 கி.மீ., ஈரோடு–பழனி 91 கி.மீ. உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் பாதை திட்டங்கள் பல ஆண்டுகளாக மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்கள் நிறைவடைந்தால் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே அமைச்சகம், மாநில அரசுகள் நேரடியாக பங்கெடுத்து செயல்பட்டால் திட்டங்களை விரைவாக முடிக்க முடியும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் ரயில்வேயுடன் இணைந்து செலவுப் பங்கீட்டு முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் 6 மாதங்களில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க்கடி... 24 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசுடன் இணைந்து ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்தனர். கர்நாடகாவில் பெய்யப்பனஹள்ளி–ஓசூர் இரட்டை ரயில் பாதை 48 கி.மீ. திட்டம் ரூ.1,160 கோடி மதிப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 50 சதவீத செலவுப் பங்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை ரூ.699 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதில் 14 கி.மீ. பாதை ஏற்கனவே பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மாநில அரசின் நிதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு கிடைத்தால் திட்டங்களை விரைவாக முடிக்க முடியும் என்பதால், தமிழகமும் இதேபோன்ற கூட்டாண்மை முறையை பின்பற்ற வேண்டும் என்று தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுடன் விரைவில் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சம்... ரூ.2.11 லட்சம் கோடியை தாண்டிய வருவாய்; தமிழ்நாட்டுக்கு ரூ.7,391 கோடி பங்கு!