கோவையில் மாற்றுத்திறனாளிகளின் அசாத்திய திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற வீல்சேர் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் (Wheelchair T20 Cricket), பலம் வாய்ந்த கோவா அணியை வீழ்த்தி தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அணி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கலைமகள் கல்லூரி இணைந்து இந்த இரண்டு நாள் கிரிக்கெட் லீக் தொடரை மிகச் சிறப்பாக நடத்தின. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் தொடக்க விழாவில், கல்லூரியின் அறங்காவலர் தங்கவேலு போட்டிகளை முறைப்படி தொடங்கி வைக்க, கல்லூரி முதல்வர் முனைவர் மாலா மாற்றுத்திறனாளி வீரர்களை வாழ்த்தி வரவேற்றார். மைதானத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி மாற்றுத்திறனாளி வீரர்கள் பந்துவீச்சு (Bowling), பேட்டிங் (Batting) மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் சாதாரண வீரர்களுக்கு இணையாக அதிரடி காட்டி அசாத்தியமாக விளையாடியது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் போட்டியில் கோவா அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. எனினும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய தமிழ்நாடு அணி, கோவா அணியை நிலைகுலையச் செய்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரைக் கைப்பற்றிச் சாம்பியன் கோப்பையையும் தட்டிச் சென்றது.
இதையும் படிங்க: கோவையில் உலக தரத்தில் புதிய ஸ்டேடியம்! விபத்துகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட பரிசளிப்பு விழாவில், லட்சுமி அத்வைத் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் கிருஷ்ணகுமார், சி.எஸ்.ஆர். தலைவர் அனு கிருத்திகா, ஐ எக்ஸ்ப்ளோர் பவுண்டேஷன் நவநீத கிருஷ்ணன், ஜோதுன்ஹெய்ம் அறக்கட்டளை எபினேசர், ராக் அமைப்பு ராம்மோகன், ரோட்டரி மித்ருத்வா பத்மநாபன், தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கத் தலைவர் துரைபாண்டியன் மற்றும் பயிற்சியாளர் அனீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளி வீரர்களின் அசாத்திய திறமையையும், எஃகு போன்ற விடாமுயற்சியையும் பாராட்டி கௌரவித்ததோடு, முதலிடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு வெற்றிக்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினர்.
இத்தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் (Best Batsman) மற்றும் தொடர் நாயகன் (Man of the Series) ஆகிய இரண்டு உயரிய விருதுகளையும் கோவா அணியின் நாகேஷ் ரெட்கர் தட்டிச் சென்றார். அதேபோல, தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் (Best Bowler) விருதைத் தமிழ்நாட்டின் அசோக் குமார் வென்று சாதனை படைத்தார். இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற நிதியுதவி மற்றும் ஆதரவு வழங்கிய அனைத்து நன்கொடையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்டோருக்குத் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு! கோவையில் அடுத்த பயங்கரம்!