நெல்லை வட்டார வழக்கு மொழி பேசி டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தனது பேச்சுவழக்கின் மூலம், நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு கட்டத்தில் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், யூடியூப் சேனலிகளில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். சமூகவலைதளங்களில் இவருக்கான ஃபாலோர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இதன் மூலம் சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்பினை பெற்றார்.

தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய ஜி.பி.முத்து, விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். ஆனாலும், நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறிய இவர், தனது குடும்பத்தை பிரிந்து இருக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு இவருக்கு சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கியது.
இதையும் படிங்க: காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கிறோம்.. அதிபர் ட்ரம்ப் வாய்க்கு பூட்டுபோட்ட இந்தியா..!

துணிவு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஜி.பி.முத்து தற்போது. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரத்தில் வசிக்கும் ஜிபி முத்து, நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு அளித்தார். இந்த மனுவில், 'உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233-ல் கீழ தெரு இருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம். பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 20 வருடத்தில் அந்த தெரு காணாமல் போய்விட்டது.

சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமம் காணாமல் போனது போன்று, இந்த தெருவும் காணாமல் போய்விட்டது. அந்த தெரு இருந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால், பொதுமக்களின் பாதை அடைக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடன்குடி பெருமாள்புரத்தில் இருந்த ஒரு தெருவை அந்தப் பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததால், இருபது ஆண்டுகளில் அந்த தெருவே இப்போது காணாமல் போய்விட்டது. தனி நபர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி காணாமல் போன தெருவைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். இல்லையேல் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என ஜிபி முத்து அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பெருமாள்புரம் மக்கள் ஜிபி முத்துவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதனால் ஜிபி முத்து வீட்டருகே போலீசார் குவிக்கப்ட்டனர். இன்று காலை அவரது வீடு முன்பு பெருமாள்புரம் மக்கள் வந்து ஜிபி முத்து ஒழிக என கோஷமிட்டனர். ஜிபி முத்துவும் அவர்களுடன் சேர்ந்து, ஜிபி முத்து ஒழிக சிரித்தபடி கோஷமிட்டார். பெருமாள்புரம் கோயில் பணிகளைத் தொடங்க வேண்டும் என ஊர் மக்கள் அப்போது புதிய பிரச்னையைக் கூறினர். அதற்கு ஜிபி முத்து தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தெரு பிரச்னையை திசை திருப்பவே கோயில் பிரச்னையைக் கொண்டுவருவதாக ஜிபி முத்துவும் குற்றஞ்சாட்டினார். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தெரு காணாமல் போனது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், தகுந்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஜிபி முத்து கூறினார்.
இதையும் படிங்க: மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு..!