தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 21 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழையும், வட மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவான மழையும், கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
எல் நினோ காரணமாக வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், கடந்த காலங்களில் எல் நினோ நிலவிய ஆண்டுகளிலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வங்கக்கடலில் புயல் சின்னம் அறிகுறி... நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பேய் மழை... தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?
தற்போது தென் தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதி வரை நீளும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியிருந்தாலும், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக ஒரு வாரம் வரை ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று (அக்டோபர் 16) 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!