கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளை திறக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 75 சூப்பர்வைசர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காலி மதுப்பாட்டில்களை ஒப்படைப்பவர்களுக்கு 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கவும், அதே போல் 1,000 ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் கியூஆர் குறியீடு மூலம் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும்போது அவற்றை ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் எந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், புதிய நடைமுறைகளால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதுடன், பணியாளர்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பியோட்டம்: உதவி ஜெயிலர் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
இதையடுத்து, காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் ஸ்கேனிங் எந்திரங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 110 கடைகளில் பணியாற்றும் 387 பேரில் 115 சூப்பர்வைசர்கள் உள்ளனர். முதற்கட்டமாக இவர்களில் 75 பேரை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
மேலும் இன்றும் கடைகளை திறக்காமல் இருந்தால் சேல்ஸ்மேன்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!