தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் அண்மையில் கலந்துகொண்ட விருது விழா ஒன்றில் மறைந்த நடிகர் காந்தா ராவ் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காந்தா ராவ் கத்தி சண்டை காட்சிகளில் வல்லவராக இருந்தார் என்று பாராட்டிய ராஜேந்திர பிரசாத், “அவரது திறமையைப் பார்த்து எம்.ஜி.ஆர் கூட பயந்து நடுங்குவார்” என்று கூறியது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நண்பரும் சக நடிகருமான ராஜேந்திர பிரசாத் அவர்களை மிகவும் மதிக்கிறேன்.
இதையும் படிங்க: OPS- காக உயிரை விட முடியுமா ? வாழ்நாளை வீணடிக்க முடியாது... பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டவட்டம்..!!
ஒரு நடிகர் மற்றொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கும். ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசியது மிகுந்த மனச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, தெலுங்கு சினிமா சகாக்களுக்கும் வலியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாசர் மேலும் கூறியதாவது: “தமிழ்-தெலுங்கு சினிமா துறையில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பரஸ்பரம் பரிமாற்றம் நீண்டகால மரபு. என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., எஸ்.வி.ரங்காராவ், சாவித்திரி, சாரதா, வாணிஸ்ரீ போன்றோரை தமிழர்கள் குடும்ப உறுப்பினர்களாக போற்றுகிறோம்.

அதேபோல் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட தலைவர். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை. என்.டி.ஆர். கட்சி தொடங்குவதற்கு எம்.ஜி.ஆரின் தாக்கம் ஒரு காரணமாக இருந்தது.
சினிமாகாரனாகவும், சங்கத் தலைவராகவும் உங்களிடமிருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். அது கட்டாயம் அல்ல, உங்கள் உள்ளத்தில் இருந்து வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ராஜேந்திர பிரசாத்தின் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ் ரசிகர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் பற்றிய இத்தகைய ஒப்பீடு ஏற்புடையதல்ல என்ற கருத்து பரவலாக உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இந்த கண்டனம் சினிமா துறையில் உள்ள தமிழ்-தெலுங்கு உறவுகளை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ராஜேந்திர பிரசாத் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்லை! மார்ச் 15-ல் திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!