கோயில் திருவிழாக்களின் போது கோவில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், புதுவையில் உள்ள திருமலையராயன் பட்டினம் பகுதியில் உள்ள வீதி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழாவின் போது, கோயில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தப்பட்டதாகவும் அதில், பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாகவும், கோயிலுக்கு அறங்காவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி, பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது அப்போது, இந்து அறநிலையத் துறை தரப்பில், கோயிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்றும் அறங்காவலர் நியமனம் தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓர் ஆண்டை கடந்த தஞ்சை நவகிரக கோவில் சிறப்பு பேருந்து.. 22 ஆயிரம் பக்தர்கள் பயணித்து சாதனை..!
இதை ஏற்ற நீதிபதி, கோயிலுக்குள் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் பக்தி பாடல்களுக்கு மட்டுமே பாட அனுமதிக்க வேண்டும் என்றும் பக்தி பாடல்கள் தவிர்த்து சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
அதேசமயம் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா பாடல்களின் மெட்டில், அதே ராகத்தில் ஆன்மிக பாடல்கள் ஏராளமாக வெளிவந்து விட்டன. கேட்பதற்கு திடீரென சினிமா பாடல் போன்றே தோன்றும், ஆனால் உற்றுக் கேட்டால் தான் அது பக்திப் பாடல் என்பது புரியவரும். இந்த விவகாரத்திற்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை.

கோயில் திருவிழாக்கள், தீ மிதி விழாக்கள், தேர் ஊர்வலம், குலதெய்வ கிடாவெட்டு போன்ற பல்வேறு விதமான விழாக்களின் மையமே மைக் செட்டும், பாடல்களும் தான். ஏராளமான ஓடிடி தளங்கள் வந்த பிறகும், கோயில் விழாக்களுக்கு இளைஞர்களின் கூட்டம் வருகிறது என்றால் அதில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளும் முக்கிய காரணம். நீதிமன்றங்களின் இத்தகைய உத்தரவுகள் கலைநிகழ்ச்சிகளுக்கு இடமில்லாமல் செய்து விடவும் வாய்ப்பு உண்டு.
நடைமுறையில் என்ன உள்ளது, இன்றைய இளைஞர்கள், குடும்பங்கள் ஆகியோர் கோயில்களுக்கு வருவதே அபூர்வமாகி விட்ட நிலையில், இத்தகைய சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்..
இதையும் படிங்க: அன்னை இல்லத்தில் எனக்கு பங்கு இல்லை.. ஜப்தி விவகாரத்தில் மகன் ராம்குமார் விளக்கம்..!