தாம்பரம் அருகே அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவரிடம், எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகியுள்ளார். பின்னர் அந்த மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான முத்துசாமி என்பது தெரியவந்தது. டிப்ளமா படித்துள்ள அவர், எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: வீட்டுக்குள்ளேயே ‘மினி டாஸ்மாக்’ நடத்திய விசிக பிரமுகர்... காத்திருந்து தட்டித்தூக்கிய காவல்துறை...!
இந்நிலையில், சுமார் 20 நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அந்த பள்ளி மாணவிக்கு முத்துசாமி நட்பு கோரிக்கை அனுப்பியுள்ளார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதையடுத்து, மாணவியுடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மாணவிக்கு கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்ற பின்னர் மாணவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் அடிப்படையிலேயே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் முத்துசாமியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவியுடன் சில நாட்களிலேயே பழகி, இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாணவர்கள் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் விதம் குறித்து பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தாராபுரத்தில் அமைச்சரை ரவுண்ட் கட்டிய வாக்காளர்கள்... அதிமுக - தவெகவினர் இடையே தள்ளுமுள்ளு...!