இந்திய விடுதலைப் போராட்டம், வீரம், தியாகம் மற்றும் ஆன்மிகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, ‘We The Leaders’ அறக்கட்டளை சார்பில் 7 பேர் கொண்ட முக்கியக் குழுவினர் நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள் என அதன் தலைவர் கே. அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘We The Leaders’ அமைப்பின் சார்பில் அதன் தலைமைப் பணியாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள குருபூஜை நிகழ்வில் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, திரு. வசந்தராஜன், திரு. மகா சுசீந்திரன், திரு. பாண்டுரங்கன், திரு. தரணி முருகேசன், திரு. நாச்சியப்பன், திரு. சோழன் பழனிசாமி மற்றும் திரு. பண்ணைவயல் இளங்கோ ஆகிய ஏழு நிர்வாகிகள் ‘We The Leaders’ அறக்கட்டளையின் சார்பில் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவிலில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். தொடர்ந்து, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் கம்பீரமான திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது தன்னலமற்ற தியாகத்தையும், சமூக நல்லிணக்கத்திற்கான வரலாற்றுப் பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கம் என்றவர்கள் கரப்பான் பூச்சியாகிவிட்டனர்: அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய தமிழிசை சௌந்தரராஜன்!
மேலும், தனது அறிக்கையில் பசும்பொன் தேவரின் சிறப்புகளைப் போற்றியுள்ள கே. அண்ணாமலை, இந்திய விடுதலைப் போர்க்களத்தில் தேவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பாலும், விளிம்புநிலை ஏழை எளிய மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக அவர் முன்னெடுத்த தன்னலமற்ற முயற்சிகளாலும் கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவரது வாழ்வும், வீரமும், உயர்ந்த தேசிய-தெய்வீகச் சிந்தனைகளும் வருங்காலத் தலைமுறையினருக்கு என்றென்றும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போட்டோஷூட்டால் மாநிலம் வளராது: தவெக அரசை வறுத்தெடுத்த அண்ணாமலை!