விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக தங்களின் கொள்கை எதிரி அல்ல என விளக்கம் அளித்தார். அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பது தங்களின் நோக்கம் கிடையாது என்றும் அதிமுக சிதைந்து விடக்கூடாது என்ற நட்புணர்வுடன் எடுத்துக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி முன் வைக்கும் விமர்சனங்களை வரவேற்பதாக தெரிவித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை எதிரி பாஜக தானே தவிர அதிமுக கிடையாது என்றார். பாஜகவால் பாதிக்கப்பட்ட கூட்டணி கட்சிகள் பல உள்ளதாகவும், அவற்றை பட்டியலிட்டும் கூறினார். கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி அவர்கள் முதுகில் சவாரி செய்து, அந்தந்த மாநிலங்களில் காலூன்றி வருகிறது பாஜக என்றும் அதே உத்தியை தமிழ்நாட்டில் பாஜக கையாள்வதாகவும், கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதிமுகவை பயன்படுத்தி இங்கு வளர துடிப்பதாகவும் அதிமுகவை பலவீனப்படுத்த துடிப்பதாகவும் கூறிய அவர், திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட, அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாஜகவின் கை தற்போது மேலோங்கி இருப்பதாக கூறினார். இதைத்தான் தாங்கள் சுட்டிக்காட்டி வருவதாகவும் அதிமுகவின் மீது தோழமை உணர்வு இருக்கிறது என்றும் அதிமுக பாழ்பட்டு விடக்கூடாது, சிதைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் கருத்துக்களை கூறி வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தவெக அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அறுதியிட்டு கூறும் திருமாவளவன்..!
அதிமுகவின் மீதும் எடப்பாடி பழனிச்சாமியின் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும் திமுக கூட்டத்தில் கூட்டணியில் நாங்கள் இருப்பதால்தான் பாஜகவையும் அதிமுகவை விமர்சிக்கிறோம் என்று அவர்கள் கருதுவதாகவும் கூறினார். திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை, அதன் கொள்கைகளை விடுதலை சிறுத்தைகள் ஏற்காது என்று கூறினார்.
ஏற்கனவே பாஜகவின் கொள்கைகளை விமர்சித்து உள்ளோம் எனக் கூறிய திருமாவளவன், அதிமுக திராவிட, பெரியார் கொள்கைகளை பேசும் கொள்கை இயக்கம் என்பதால் சில கருத்துக்களை நட்பு உறவோடு தான் முன்வைக்கிறோம் என்றும் அது தேவையற்றது என்றால் நாங்கள் பேசப்போவதில்லை என கூறினார்.
இதையும் படிங்க: "சீட்டுக்கும் நோட்டுக்கும் செல்லும் விசிக!" - திருமாவை வம்பிழுக்கும் பாஜக...!