சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தில் இருக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அஜித் குமாரின் மரண வழக்கு கொலை வழக்கமாக பதிவு செய்யப்பட்ட பிறகு, ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஜித் குமாருக்கு நடந்த சம்பவங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை படிக்கும்போது மனம் பதறுவதாக தெரிவித்தனர்.

அந்த அளவுக்கு கொடூரமான மிருகத்தனமான முறையில் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாகவும், சாதாரண கொலையே அல்ல என்றும் தெரிவித்தனர். கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், அஜித் குமார் உடம்பில் காயமில்லாத இடங்களே இல்லை என்று கூறினர். இதனை அடுத்து அஜித்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஜித்குமார் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: அரசு அதை அங்கீகரிக்கக் கூடாது... இதுதான் எங்கள் நிலைப்பாடு... திட்டவட்டமாக கூறிய திருமாவளவன்!!

அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பது ஆறுதல் அளிக்கிறது., மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது முதலமைச்சரின் நேர்மையை காட்டுகிறது என்று தெரிவித்தார். காவல்துறையினர் ரவுடிகளை போல நடந்து கொள்வதாக ஒருமுறை உச்சநீதிமன்றமே குறிப்பிட்டதாக தெரிவித்த திருமாவளவன், புலன் விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

வழிப்போக்கர்களைப் போல, கூலிப்படை கும்பலை போல, அஜித்குமாரை தூக்கிச் சென்று இருப்பதாகவும், இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அஜித்குமாரின் தம்பி நவீன் குமாரையும் கொண்டு போய் பல மணி நேரம் வைத்து, விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தி இருக்கிறார்கள்., அவரையும் அடித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அஜித் குமார் மரணம் காவல்துறை அத்துமீறல் மட்டுமல்ல, இது ஒரு அரச பயங்கரவாதம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு பணி மற்றும் வீடு கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ள நிலையில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துவதாக கூறினார்.
இதையும் படிங்க: அமித்ஷா மட்டும்தான் கூறுகிறார்; எடப்பாடி இதுவரை ஏதும் கூறவில்லை... திருமாவளவன் பகீர் கருத்து!!