மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்குகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிக்கந்தர் தர்கா நிர்வாகம் தரப்பில் சுமார் 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து விசாரித்து வந்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, வாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஆன்மீக மற்றும் அரசியல் ரீதியாகப் பெரும் ‘வைப்’ ஏற்படுத்தியுள்ளதால், மதுரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இறுதி நாள் விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் எதுவுமில்லை; 1920-ஆம் ஆண்டு ஆய்வின் போதும் அங்கு தூண் இருந்ததாகக் குறிப்புகள் இல்லை” என வாதிட்டார். மேலும், ஒரு கோயிலின் ஆகம விதிகள் மற்றும் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் பூஜை முறைகளைத் தனி நபர் ஒருவரின் மனுவை ஏற்றுத் திடீரென மாற்ற முடியாது என்றும், இது போன்ற விவகாரங்களை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: “போலீஸாரை திரும்பப் பெற முடியாது!” – திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!
மறுபுறம், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானுக்கே சொந்தமானது என்பதைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன; அங்கு தீபம் ஏற்றுவது என்பது வழிபாட்டு உரிமை சார்ந்தது” என வாதிட்டனர். ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல் அரசு பிடிவாதம் காட்டுவதாகவும், நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகவும் அவர்கள் முறையிட்டனர். “தீபம் ஏற்றுவது என்பது ஒரு புனிதமான செயல், அது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தாது” எனத் தனி நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்ததை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
இந்த வழக்கில் காரசாரமான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், “கார்த்திகை மாதம் முடிந்து தற்போது மார்கழி பிறந்துவிட்டதால், அடுத்த கார்த்திகை தீபத்திற்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது; எனவே நிதானமாகத் தீர்ப்பு வழங்கப்படும்” எனக் கூறி நீதிபதிகள் தீர்ப்பைத் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இன்று வெளியாகவுள்ள இந்தத் தீர்ப்பு, திருப்பரங்குன்றம் மலையில் காலம் காலமாக நிலவி வரும் மரபுகளை உறுதிப்படுத்துமா அல்லது புதிய நடைமுறைகளுக்கு வித்திடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து திருவிழாக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: "இது திட்டமிட்ட கொலை; திமுக அரசுதான் முழு காரணம்" - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!