திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தீபத்தூண் விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக பாஜக, தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி நடைபெற்று வரும் இயக்கத்தின் தொடர்ச்சியாக, புதிய திட்டங்களை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

இன்று (பிப்ரவரி 23) சதுர்த்தி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் சிறப்பு நாளில், அருள்மிகு முருகப் பெருமானுக்கு அர்ப்பணித்து வீடுகளில் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு அவர் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் ஆறு தீபங்கள் முருகப் பெருமானுக்காகவும், ஒரு தீபம் தமிழகத்தின் நலனுக்காகவும் ஏற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகம் முழுவதும் கந்த சஷ்டி பாராயணம் நடத்த முருக பக்தர்கள் பேரவை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அனைவரும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும் என தமிழக பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!
இந்நிலையில், போராட்டத்தின் அடுத்த படியாக வரும் மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமி நாளன்று மாலை வேளையில் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், "திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக இன்று ஏழு தீபங்கள் ஏற்றி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். மார்ச் 2 அன்று கிரிவலம் வருவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின்போது தீவிரமடைந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முழங்கி பக்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என பாஜக தலைமை வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!