வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பரவலாக ஏரி குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றது. செங்கம் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பதிவான 24 மணி நேர மழை அளவீட்டில் 111.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கனமழை அளவாகும்.
இதையும் படிங்க: #BREAKING காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா?... ஆட்சியர் வெளியிட்ட அதிமுக்கிய அறிவிப்பு...!
திருவண்ணாமலை மாநகரம், வேங்கிக்கால் அடி அண்ணாமலை, இனாம் காரியந்தல், நல்லவன் பாளையம், கீழ்நாச்சிபட்டு, கச்சிராப்பட்டு, மேல் புத்தியந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் முழுவதிலும் இருபுறமும் கரைபுரண்டு ஓடிய மழை வெள்ளத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாநகரை பொறுத்தவரையில் தேரடி வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கழிவு நீருடன் மழை நீர் இணைந்து வெள்ள நீர் கடை மற்றும் வீடுகளுக்குள் புகுந்ததால் வியாபாரிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
கனமழை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்துடனும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால், சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உப்பளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் அபாயம் நிலவுவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகள் மற்றும் வானிலை நிலவரத்தை மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சியிலும் கனமழை தொடர்ந்து வருவதால் இன்று (23.10.2026) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பத்மஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING விடாது கொட்டும் அடை மழை... இந்த 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!