தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாகப் பேசவே தாம் இங்கு வந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறையை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் துரோகத்தின் அடையாளமான 'எட்டப்பன்கள்' தான் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய பின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "தமிழ்நாடு, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மொழியின் எதிர்காலம் குறித்துப் பேசுவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென் மாநில தண்டனையாகத் தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!
தொடர்ந்து தொகுதி மறுவரையறை திட்டத்தைக் கடுமையாகச் சாடிய அவர், "வரலாற்றில் 'எட்டப்பன்' என்பவர் துரோகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார். தென் மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாதகத்தை ஏற்படுத்தும் இந்தத் தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் எட்டப்பன்கள் தான். நாடாளுமன்றத்தில் இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி இத்திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும்" என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி! காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்பு!