கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி கூட்டுரோடு அருகே நடந்த மோசமான சாலை விபத்து, முழு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திகிரியில் இயங்கி வரும் ‘செவன்த் டே மெட்ரிகுலேஷன்’ பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மதன் (வயது 13), ஆர்யன் சிங் (வயது 13) மற்றும் அந்திவாடியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த ஹரீஷ் (வயது 14) ஆகிய மூவரும் நண்பர்கள். அவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பது வழக்கம்.
அன்று மதன் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு சாதாரண உடையில் சென்றிருந்தார், ஆனால் ஹரீஷ் மற்றும் ஆர்யன் சிங் இருவரும் பள்ளி சீருடையுடன் இருந்தனர். செவன்த் டே பள்ளியில் இருந்து பள்ளி முடிந்து அவர்கள் வீடு திரும்புவதற்காக அந்திவாடி பகுதியில் செல்லும் வழியில் வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி சென்றுள்ளனர். பள்ளியிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் முன்னால் செல்லும் லாரியை முந்த முயன்ற போது திடீரென வாகனத்தின் சமநிலை தவறி அந்த லாரியின் பின்னால் மோதியது.
இச்சம்பவத்தில் மதன் மற்றும் ஆர்யன் சிங் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹரீஷ் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் படுகாயமடைந்ததால் சிகிச்சை பலனின்றி ஹரீஷும் உயிர் இழந்தார் என்ற செய்தி குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அடக்கடவுளே!! பிஞ்சிலேயே பழுக்குறதுன்னா இதுதானா? - 6ம் வகுப்பு மாணவன் செய்த செயலைப் பார்த்து ஷாக்கான போலீசார்...!
பள்ளி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லுவது குறித்தும், 18 வயதிற்கும் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் விதிகளை மீறி பயணிப்பது குறித்தும் மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இறந்த மாணவர்களின் உடல்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மத்திகிரி காவல் துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர். பள்ளி மேலாண்மையும் பெற்றோர்களும் அந்த பகுதியில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறான உயிரிழப்பு மீண்டும் நிகழக்கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாணவர்களின் ஜாலியான பைக் ரெய்டு பெற்றோர்களின் கனவுகளை இருளாக்கி விட்டதை எண்ணி அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.
இதையும் படிங்க: திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள்; நெய்வேலியில் அதிர்ச்சி..!