திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலைமேல் குமாரர் திருவிழாவிற்கு மலை உச்சியில் பிரசாதம் தயாரித்து வழங்க மத்திய தொல்லியல் துறை நிபந்தனைகளைத் தளர்த்தியதை அடுத்து, விழாவில் பாரம்பரிய வழக்கமான நடைமுறையைத் தொடரலாம் என உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலையின் உச்சியில் ஆண்டுதோறும் "மலைமேல் குமாரர்" வேல் எடுக்கும் திருவிழா பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு மலை மேலேயே சமையல் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி கோரப்பட்ட நிலையில், தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து 7 கடுமையான நிபந்தனைகளை விதித்தனர். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மலை உச்சியில் சமைப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க இயலாது என்றும், கீழே சமைக்கப்பட்ட உணவை மேலே கொண்டு சென்று பரிமாறலாம் என்றும் கூறி அதிகாரிகளுக்குப் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!
இந்நிலையில், மலை உச்சியில் பிரசாதம் தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கக் கோரி நீதிபதிகளிடம் மீண்டும் அவசர முறையீடு செய்யப்பட்டது. அப்போது ஆஜரான மத்திய தொல்லியல் துறை தரப்பு வழக்கறிஞர், இன்றைய திருவிழாவைக் கருத்தில் கொண்டு தொல்லியல் துறை விதித்த 7 நிபந்தனைகளும் இந்த ஒருமுறை நிகழ்விற்குத் தளர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
தொல்லியல் துறையின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், காலையில் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். மேலும், திருப்பரங்குன்றம் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவில் வழக்கமான பாரம்பரிய நடைமுறைகளையே பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் தொடரலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முழுமையாக முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!